21 February 2012

பூமரம் (நித்யஸ்ரீ)

Posted in , , ,


                  காலை வேலையில் பரபரப்பாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த தன் மகனிடம் சென்று லட்சுமியம்மாள் ஏம்பா சிவா சாயங்காலம் வரும் போது இந்த மருந்து கொஞ்சம் வாங்கிட்டு வர்றீயா ? ரெண்டு நாளா ஒரே இருமலா இருக்கு.                சரிம்மா நான் வாங்கிட்டு வர்றேன் கொடுங்க...என்ற படியே, சக்தி டிபன் ரெடியா ...? சீக்கிரம் எனக்கு நேரம் ஆகுது பார் .என்று சமையலறையை நோக்கி தன் மனைவிக்கு குரல் கொடுத்தான் சிவா.


               ம்..ம்.. ஒரு ஐந்து நிமிஷம் இருங்க சட்னிய மட்டும் தாளிக்கனும்.

              என்ன சக்தி ஏற்கனவே எனக்கு லேட் ஆயிடுச்சி கொஞ்சம் சீக்கிரமா ரெடி பண்ண கூடாதா என்றான் சற்று கடுப்புடன்.


                 எனக்கென்ன பத்து கையா இருக்கு எல்லாரையும் போல ரெண்டு கைதானே இருக்கு. நான் மட்டும் ஒருத்தியா எத்தனை வேலை தான் செய்ய முடியும். காலையில் எழுந்திருச்சு துணி துவைச்சு எல்லாருக்கும் நான் தானே வடிச்சு கொட்டனும். அது போதாதுன்னு உங்கம்மாக்கு வேற சேவை செய்யனும் என்று புலம்பிக் கொண்டே சட்னியை தாளிப்பது போல் தன் கணவனையும் மாமியாரையும் தாளித்துக் கொண்டிருந்தாள்.

               அம்மா... அம்மா.. என்னோட கணக்கு புத்தகம் காணோம் வந்து தேடி கொடும்மா என்று சிணுங்கிய படியே வந்தான் அவர்களின் ஏழு வயது சிறுவன் ஹரிஷ்.

                     உங்கப்பாவும் உன் பாட்டியும் என் உயிர வாங்கறது பத்தாதுன்னு நீ வேற ஏண்டா ஹோம் வொர்க் பண்ணிட்டு எங்கேயாவது தூக்கி எறிய வேண்டியது அப்புறம் ஸ்கூலுக்கு போகற நேரத்துல வந்து என் உயிர வாங்கு. உங்கப்பா சும்மாதானே இருக்காரு போய் கேளு என்று விரட்டினாள்.

                      அப்பா என்னோட கணக்கு புக்க காணோம் கொஞ்சம் தேடி கொடுங்க என்றான்.

             சரிடா கண்ணா அப்பா தேடி தர்றேன் நீ அழாதே வா உட்காரு. என்று சமாதான படுத்தி அவன் கணித புத்தகத்தை தேடிக் கொடுத்து ஹரிஷை பள்ளிக்கு கிளப்பினான் சிவா.

            டிபன் ரெடி சாப்பிட வாங்க உங்கம்மாவையும் சாப்பிட கூப்பிடுங்க. ஹரிஷ் வா வந்து சாப்பிடு ஸ்கூல் வேன் வர்ற நேரம் ஆயிடுச்சு. என்று தன் மகனுக்கு இரண்டு இட்லியை ஊட்டி விடவும் பள்ளி வேன் வரவும் சரியாக இருந்தது.ஹரிஷை பள்ளிக்கு அனுப்பி விட்டு தானும் அலுவலததிற்கு கிளம்பினாள் சக்தி.

             ஏன் சக்தி அம்மாவ ஒரு வார்த்தை சாப்பிட கூப்பிட்டா என்ன குறைச்ஞா போயிடுவ..?

           இங்க பாருங்க காலையிலேயே உங்க கூட மல்லுகட்ட எனக்கு நேரம் இல்ல. எனக்கு ஆபிஸுக்கு நேரம் ஆகுது. உங்களுக்கு இப்ப நேரம ஆகலையா...? எங்கூட சண்ட போட மட்டும் உங்களுக்கு நேரம் இருக்குமே..?

             அம்மா நீங்க சாப்பிட வாங்க என்று தன் அம்மாவை அழைத்து ஒரு தட்டில் மூன்று இட்லிகளை வைத்து சட்னியை ஊற்றினான். அதை அமைதியாய் சாப்பிட்டு விட்டு எழுந்தாள் லட்சுமியம்மாள்.வழக்கமாய் இது போன்ற சண்டைகள் நடப்பது இயல்புதானே என்று அதை பெரிதாக எண்ணிக் கொள்ளாமால் அமைதியாய் சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்தார் லட்சுமியம்மாள்.

               சிவா, சக்தி இருவருமே சாப்பிட்டு முடித்ததும் ஒன்றாகவே அலுவலகம் கிளம்பினார்கள்.


                         மாலையில் அலுவலகம் முடிந்து வந்த சிவா, வாங்கி வந்த இருமல் மருந்தை தன் அம்மாவிடம் கொடுத்தான். இந்தாங்கம்மா. நீங்க கேட்ட இருமல் மருந்து. மதியானம் சாப்பிட்டிங்களா...? என்றான் உண்மையான பாசத்தோடு. மனைவிக்கு பிடிக்க வில்லை என்பதற்காக தனக்கு அம்மா இல்லை என்று ஆகி விட முடியாதே தன்னை பத்து மாதம் சுமந்து பெற்றவள் ஆயிற்றே..!சிறு வயதிலேயே தன் தந்தை இறந்த பிறகு தன் அன்னை அவனை வளர்க்க என்ன கஷ்ட்டப் பட்டாள் என்று அவனுக்குத்தானே தெரியும். நேற்று வந்த ஒருத்திக்காக எப்படி தன் அம்மாவை அவனால் விட்டு தர முடியும். ஆனால் அவனால் அவன் மனைவியையும் கட்டுபடுத்திட முடியவில்லை. அம்மா சக்தி பேசறத எதும் நீங்க மனசுல வச்சிக்காதீங்க. எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு அவன் தன் அறைக்கு சென்று விட்டான்.

             போகும் தன் மகனையே பார்த்து கொண்டிருந்தார் லட்சுமியம்மாள்.

                      நாட்கள் செல்ல செல்ல சக்திக்கு தன் மாமியாரின் மேல் இன்னும் வெறுப்பு கூடிக் கெண்டேதான் போயிற்றே தவிர குறையவில்லை.அப்படித்தான் ஒரு நாள் லட்சுமியம்மாவிற்கு மிகவும் உடல் நிலை முடியாமல் போனது. குடிக்க வெண்ணீர் வேண்டும் தேவைப் பட சக்தியிடம் கேட்டால் அதற்கும் அவள் ஏதாவது சண்டையிடுவாள் என்றெண்ணி அவராகவே அடுப்படிக்கு சென்று அடுப்பை பற்ற வைத்து வெண்ணீர் வைப்பற்காக சிறிய பாத்திரம் ஒன்றை தேடி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்தார். தண்ணீர் மள மளவென்று கொதிக்கவும் அதை இறக்கி அடுப்பை அமர்த்தி விட்டு இறக்கிய பாத்திரத்தை அப்படியே வைத்து விட்டு,வெளியே சென்று தன் மாத்திரைகளை எடுத்து வருவதற்குள்,அடுப்படிக்குள் நுழைந்த ஹரிஷ் வெண்ணீர் பாத்திரத்தை கை தவறி தள்ளி விட அது அவனின் காலில் கொட்டிட அலறினான்.

                சத்தம் கேட்டு வருவதற்குள் வெண்ணீர் கொட்டிய இடம் கொப்பளமாய் போக சிறுவன் வலியிலும் எரிச்சலிலும் அழத் தொடங்கினான். சிவாவும் சக்தியும் பதறி போய் விட்டார்கள் உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருந்திட்டு அழைத்து வந்ததனர்.

            என்னப்பா ஆச்சு ...? பரிதவிப்புடம் கேட்டாள் பாட்டி...

                  அவ்வளவுதான் சக்தி அலற தொடங்கி விட்டாள். எல்லாமே உங்களாளத்தான் ..? என்ன பாக்குறீங்க உங்கள யாரு அடுப்படிக்கு போய் இப்போ சுடுதண்ணீ வைக்க சொன்னா சரி   வைச்சது தான் வைச்சிங்க அத அப்படியேவா இறக்கி வைக்கிறது சின்ன பிள்ளை இருக்க வீடாச்சே ஏதாவது ஒண்ணு கணக்கு ஒண்ணு ஆச்சுன்னா என்ன பண்ணுவீங்க,,,?

இல்லமா உடம்புக்கு ரொம்ப முடியல அதான் கொஞ்சம் சுடுதண்ணி வைக்கலாமேன்னு ....

               ஏன் பச்ச தண்ணி குடிச்சா என்ன செத்தா போய்டுவீங்க அப்படித்தான் போய் சேர வேண்டியதுதானே ஏன் இருந்து என் உயிர வாங்குறீங்க..? என்ற சக்தியின் கன்னத்தில் ஒரு அறை வைத்தான் சிவா.

             என்னடி சொன்ன..?

                     இத்தனை நாள் இது மட்டும் தான் இல்லாம இருந்துச்சு இப்ப உங்கம்மாவுக்காக நீங்க என்ன அடிக்க ஆரம்பிச்சிடின்ங்க இல்ல..? ஏன் நிறுத்திடிங்க இன்னும் அடிங்க அடிச்சு கொல்லுங்க . நானும் என் பையனும் எப்படி போனா உங்களுக்கு என்ன வந்தது...? என்று அழுது கொண்டே உள்ளே சென்று படுத்துக் கொண்டாள்.

               அம்மா ... என்னை மன்னிச்சிடுங்கம்மா அவ இப்படியெல்லாம் பேசினதுக்கு நானும் ஒரு காரணாமாயிட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.

         அறைக்குள் நுழைந்ததும் எழுந்து அமர்ந்த சக்தி, உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள் .

      "என்ன ?"

              இனிமேல் இந்த வீட்ல நான் இருக்கனும் இல்ல உங்கம்மா இருக்கணும் அத நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்றால் உறுதியாக.. இனிமேல் உங்கம்மாக்கு சேவை செய்த்துட்டு உங்ககிட்ட அடி வாங்கிட்டு என்னால் இந்த வீட்ல இருக்க முடியாது. உங்கம்மாவை நாளைக்கே கிராமத்துக்கு அனுப்பிடுங்க, அங்க தான் உங்களுக்கு சின்னதா ஒரு சொந்த வீடு இருக்கே அவங்க அங்க போகட்டும் என்றாள்.

           சக்தி சொன்னதையே யோசித்த படி அப்படியே உறங்கி போனான் சிவா.

                 மேலும் இரண்டு நாட்கள் கடந்தது. அன்று ஞாயிற்று கிழமை சக்தி வழக்கம் காலையில் எழுந்து அனைத்து வேலைக்களையும் முடித்து விட்டு ஹரிஷை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். வாரா வாரம் ஞாயிறு என்றால் அம்மா அப்பா பிள்ளை என மூவரும் எங்காவது வெளியில் செல்வது வழக்கம்.இன்று சிவா செல்லவில்லை . சக்தியும் ஹரிஷும் மட்டும் சென்றனர்.


          அவர்கள் சென்றதும், தம் அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான்.

               அம்மா... நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ...

              என்னப்பா எங்கிட்ட என்ன தயக்கம் சொல்லுப்பா...?

            இல்லம்மா வர வர சக்திக்கும் உங்களுக்கும் அடிக்கடி ஏதாவது பிரச்சனை வந்துகிட்டே இருக்கு, அவகிட்ட எதும் என்னால பேசமுடியலம்மா அதான் உங்ககிட்ட பேசலாமேன்னு ....

      ம்…... சொல்லுப்பா..

          அம்மா கொஞ்ச நாளைக்கு நீங்க ,..... எனக்கு இத சொல்ல ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ஆனால் இத விட்டா எனக்கு வேற வழி தெரியாதலால் தான்ம்மா சொல்றேன்,நீங்க நம்ம கிராமத்துல இருக்கற வீட்டுக்கு போய் தங்கி இருங்கம்மா. நான் உங்களுக்கு தேவையான பணத்தை அனுப்பி வைக்கிறேன். அதுக்குள்ள சக்தியும் கொஞ்சம் சமாதானம் ஆயிடுவா.அதுக்கப்புறம் நானே வந்து உங்கள கூட்டிடு வர்றேன். அது வரை நீங்க கொஞ்சம் சமாளிச்சு இருங்கம்மா என்றான் சிவா.

         பேசிக் கொண்டிருந்த தன் மகனை பரிதாபமார் பார்த்தார் லட்சுமியம்மாள். சரிப்பா நான் நாளைக்கு போறேன்ப்பா என்றார்.

         சிவா எதும் சொல்லாமல் அமைதியாய் எழுந்து சென்றான்.

           மாலை சக்தி வந்ததுமே தன் அம்மாவை கிராமத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறினான்.

மறுநாள் காலை,

                     எப்போதும் போல் காலையில் எழுந்து பரபரப்புடன் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தவனிடம் வந்து ஹரிஷ், அப்பா அப்பா பாட்டி ரூம்ல காணோம்ப்பா நான் வீடு புல்லா தேடிட்டேன் எங்கேயும் பாட்டி இல்லப்பா என்றதும் பதறிப் போய் எழுந்து வீடு முழுவதும் அலசினான். லட்ச்சுமியம்மாள் காணவில்லை, அக்கம் பக்கத்தில் எல்லாம் விசாரித்தான் யாரும் தாங்கள் பார்க்க வில்லை என்று சொல்லிவிட்டனர்.என்ன செய்வதென்று தெரியாமல், ஆபிஸ்க்கு இரண்டு நாட்கள் விடுப்பு தெரிவிட்து இரண்டு நாட்களாக தேடி அலைந்தான். அலைந்தது தான் மிச்சம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அலுப்போடு வீடு திரும்பிய சிவாவிற்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் ப்ரம் அட்ரஸ் இல்லாம் இருந்தது. உடனே அதை பிரித்து படித்தான்


பிரியமான மகனுக்கு,


                   பாசமும் நேசமும் நிறைந்த உன் அம்ம எழுதுவது. நீ என்ன பற்றி கவலை பட வேண்டாம் நான் இங்கு ஒரு இடத்தில் மிகவும் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். இந்த இரண்டு நாட்களாக நீ என்னைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் என்னை தேடி அலைந்திருப்பாய் அதற்காக என்னை மன்னிகவும். இங்கு வந்ததும் என்னால் உனக்கு கடிதம் எழுத முடியவில்லை. இப்போதும் கூட நான் சொல்வதை இங்கு என் கூட இருக்கும் ஒருவர்தான் எழுதுகிறார். என்னால் உனக்கும் உன் மனைவிக்கும் சண்டை எந்த பிரச்சனையும் வேண்டாம் என்றுதான் நான் இங்கு வந்து விட்டேன். நான் இருக்கும் இடத்தின் முகவரி கூட இக்கடிதத்தில் குறிப்பிட வில்லை. ஏனென்றால் நீ என்னை தேடி வருவது கூட சக்திக்கு பிடிக்காமல் போகலாம் அதானல் உங்களுக்கு எதும் சண்டை வந்து விடக் கூடாது என்று தான். நானே உனக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறேன். எப்போது என் கடிதம் வர வில்லையோ அப்போது என் உயிர் இந்த மண்ணை விட்டு பிரிந்திருக்கும். அப்போது இங்குள்ளவர்களே உனக்கு தகவல் சொல்லியனுப்புவார்கள் அப்போது வந்து என்னுடைய இறுதி சடங்கை மட்டும் நீ நடத்தி விட்டு போ. இது தான் என்னுடைய கடைசி ஆசை..
அத்துடன் அக்கடிதம் முற்று பெற்றிருந்தது.


            அம்மா... என்று கண்ணிர் விட்டு அழுதான் சிவா. அம்மாவிடம் இருந்து 3 மாதம் ஒரு முறை கடிதம் மட்டும் வந்து கொண்டே இருந்தது சிவாவிற்கு.

நாட்கள் கடந்தன....

                ஹரிஷ்க்கு எட்டாவது பிறந்தநாள் வந்தது. தங்களுக்கு இருப்பது ஒரே பையன் என்பதால் ஒவ்வொரு பிறந்த நாளையும் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். சிவாவும் சக்தியும் அதே போல் இந்த முறையும் தன் பையனின் பிறந்த நாளை வெகு விமரிசயாய் கொண்டாட வேண்டும் என்று ஆவலுடன் இருந்த சக்தி, மாலை அலுவலகம் முடிந்து வந்ததும் இதைப் பற்றி தன் கணவனிடம் பேச ஆரம்பித்தாள். என்னங்க நம்ம பையனுக்கு எட்டாவது பிறந்த நாள் வருது நாம நம்ம ஆபிஸ் ஸ்டாப்ஸ், சொந்தகாரங்க எல்லாரையும் கூப்பிட்டு நல்லா கிராண்டா கொண்டாடனுங்க என்றாள்.

சொல்லிக்கொண்டிருந்த தன் மனைவியிடம் சிவா, ஏன் சக்தி இப்படித்தானே எங்கம்மா என் மேல பாசமா இருந்திருப்பாங்க, சின்ன வயசுல எங்கப்பா இல்லாம என்ன எங்கம்மா எவ்வள்வு கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பாங்க, என்னோட சின்ன சின்ன அசைவுகள்ல தானே எங்க அம்மா அவங்களோட உலகத்தை பார்த்து இருப்பாங்க, அப்படி பட்ட அம்மாவுக்கு நான் என்ன செஞ்சேன்....? உனக்கு எங்கம்மா பிடிக்காத ஒரே காரணத்துகாக நான் ஒதுக்கிட முடியுமா..? இப்ப கூட நான் உன் கூட வாழ்ந்துட்டு இருக்கேன் தெரியுமா நீ எங்கம்மா எனக்கு பார்த்து கட்டி வைச்ச பொண்ணுங்கிற ஒரே காரணத்துகாகத் தான். என்று கூறி விட்டு போன தன் கணவனைப் பார்த்தாள்.

           ஆனால் ஹரிஷோ இந்த முறை தன் பிறந்த நாளை வீட்டில் கொண்டாட போவதில்லை என்றும், அனாதை ஆசிரம் அல்லது முதியோர் இல்லத்திலோ கொண்டாடுவதாக கூறினான் ..

என்னடா ஏன் அப்படி சொல்ற ..? - சக்தி

              இல்லம்மா எங்க ஸ்கூல்ல டீச்சர் சொல்லிருக்காங்க நாம தினமும் நல்லா சாப்பிடறோம் நல்லா ட்ரெஸ் பண்றோம் ஆனா அவங்களுக்குன்னு யாருமே இல்லைன்னு, நாம பிறந்த நாளுக்கு செலவு பண்றத அங்க உள்ளவங்களுக்கு உபயோக படற மாதிரி ஒரு வேளை சாப்பாடு போட்டு கொண்டாடினா அவங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும் நமக்கும் அவங்கள மாதிரியான பெரியாவங்க ஆசிர்வாதமும் கடவுளோட ஆசிர்வாதமும் கிடைக்கும்ன்னும் சொன்னாங்கம்மா.

                 அதனால எங்க ஸ்கூல்ல எல்லா பசங்களும் அவங்க பிறந்த நாளை அனாதை ஆசிரம், முதியோர் இல்லம் இப்படி இடங்களுக்கு தான் போய் கொண்டாறங்கம்மா இந்த என்னோட பிறந்த நாள் கூட நான் அப்படித்தான் கொண்டாட போறேன் என்றான் ஹரிஷ்.

              ஹரிஷ் சொல்வதை கேட்டதும் சிவாவிற்கு தன் அம்மாவின் நினைவு வந்து விட்டது, இந்நேரம் அம்மாவும் ஏதாவது முதியோர் இல்லத்திலோ அல்லது அனாதை ஆசிரமத்திலோ தானே இருப்பார்கள் என்று இது நாள் வரை அவன் நினைத்து கொண்டிருந்தான். இப்போது தன் மகனின் பிறந்த நாளை இது போன்ற இடங்களில் கொண்டாடினால் அங்கு தன் தாயை பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் தான் அவனுக்கு.

              சொன்னாற்ப் போலவே ஹரிஷ் பிறந்த நாளை கொண்டாட அனாதை ஆசிரம் ஒன்றிற்கு சென்றாகள்.

               அங்குள்ள அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்து ஒரு வேளை உணவும் அளித்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். அந்த ஹோமிற்கு வந்த நேரம் முதல் சிவா தன் தாய் அந்த அங்கு இருக்க மாட்டார்களா என்று ஏக்கம் நிறைந்த கண்களோடு தேடினான் ஆனால் அவன் கண்களுக்கு லட்ச்சுமியம்மாள் தெபடவேயில்லை.

சற்று நேரத்தில் அந்த ஹோமின் உரிமையாளர் வந்து ஹரிஷிடம் வந்து தம்பி, இங்க ஒரு பாட்டி இருக்காங்க அவங்க பேரனுக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாளாம் அவங்க பேரனுக்காக ஒரு பொம்மை வாங்கி வைச்சத உனக்கு கொடுக்கனும்ன்னு ஆசை படறாங்க, அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைப்பா நீ அவங்க இருக்கற ரூமுக்கு வறியா என்றார். உடனே ஹரிஷ் சரி என்று தலையசைத்து அவர்கள் பின்னே சென்றான்.

              அங்கு சுவரை பார்த்தபடி ஒரு வயதான மூதாட்டி படுத்திருந்தார்.

              நிர்வாகி அவர் அருகில் சென்று, அம்மா உங்கள பார்க்க யார் வந்திருக்கான்னு பாருங்க இன்னைக்கு இந்த பையன்னுக்கு தான் பிறந்த நாள் இங்க இருக்கற எல்லாருக்கும் இனிப்பு, ஒரு வேளை உணவும் கொடுத்து, இந்த சின்ன வயசிலே அவனுக்கு தான் எத்தனை பெரிய மனசு பார்த்தீங்களா...? நீங்க அவனுக்கு ஏதோ பொம்மை கொடுக்கனும்ன்னு சொன்னீங்கல அதான் அவன் உங்கள பார்க்க வந்திருக்கான்.

                உடனே அந்த முதியவள் இவன்புறம் திரும்பினாள், அவள் திரும்பியதுமே, ஹரிஷ் வேகமாக சென்று பாட்டி என்று கட்டிக் கொண்டான். என்ன பாட்டி நீ இவ்வளவு நாள் இங்கதான் இருந்தீயா ஏன் எங்கிட்ட சொல்லாமேலே போய்ட்ட, அப்பா உன்னை காணோம்ன்னு எங்க எல்லாமோ தேடி பார்த்தாங்க தெரியுமா..? நீ வீட்ட விட்டு போன இரண்டு நாளா அப்பா எதுமே சாப்பிடவே இல்ல தெரியுமா, என்று தன் மழலை ததும்பும் செல்லக் குரலில் சொன்னான் ஹரிஷ். ஏன் பாட்டி எங்க எல்லாம் விட்டு போய்ட்ட...? உங்களுக்கு அம்மாவையும் அப்பாவையும் பிடிக்கலையா பாட்டி அதான் வீட்ட விட்டு வந்துட்டிங்களா ..? என்று வெகுளித்தனமாக கேட்டான் ஹரிஷ்.

             அப்படியெல்லம் இல்லடா கண்ணா.பாட்டி கொஞ்ச நாள் டூர் போய் இருந்தேண்டா கண்ணா, அதான் இங்க என்ன மாதிரியே நிறைய போர் இருக்காங்க அவங்கோளட கோயில் குளம்ன்னு போயிட்டு வந்தேன்.இன்னைக்கு உன்னோட பிறந்த நாள் இல்லையா அதான் நான் வந்திட்டேன்.

           நான் இங்க வருவேன்னு உனக்கு எப்படி தெரியும் பாட்டி...?

              நீ இங்க வருவேன்னு உங்கப்பாதான் எங்கிட்ட சொன்னான். அதான் நான் உனக்கு ஒரு பொம்மை வாங்கிட்டு வந்தேன் என்று தன் பேரனுக்காக வாங்கி வைத்திருந்த பொம்மை ஒன்றை எடுத்து ஹரிஷிடம் நீட்டினாள், இந்தாடா கண்ணா உனக்கு இந்த பாட்டியோட பிறந்த நாள் பரிசு. வாங்கி பார்த்த ஹரிஷ் பாட்டி பொம்மை ரொம்ப அழகா இருக்கு. இருங்க பாட்டி அப்பாவும் அம்மாவும் இங்கதான் இருக்காங்க நான் போய் கூப்பிட்டு வர்றேன் என்று சிறுவன் வேகமாக ஓடினான்.

              ஹரிஷை காணாமல் சிவாவும் சக்தியும் தேடிக் கொண்டு, இருந்த வேளையில் ஹோமின் நிர்வாகி அவர்களிடத்தில் தான் தான் ஹரிஷை அழைத்துச் சென்றதாகவும், உடல் நிலை சரி இல்லாத ஒருவருக்கு அவர் அறையில் சென்று இனிப்பு கொடுக்க அழைத்து சென்றதாகவும், அது மட்டுமில்லாமல் அந்த அம்மாளின் பேரனுக்கும் இன்று பிறந்த நாள் அதனால் உங்கள் பிள்ளைக்கு பரிசு கொடுக்க ஆசைப் பட்டார்கள் அதனால் தான் அழைத்துச் சென்றேன் என்று சொல்லி அவர்கள் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.

            லட்சுமியம்மாளும் ஹரிஷும் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவாவும் சக்தியும் அறைக்குள் நுழைந்தனர்.

           அப்பா நீங்களே வந்துட்டீங்களா இங்க பாருங்கப்பா நம்ம பாட்டி, இங்க தான் இருக்காங்க, பாட்டி இத்தனை நாள் டூர் போய் இருந்தாங்களாம். இன்னைக்கு என்னோட பிறந்த நாளுக்காக வந்திருக்காங்கப்பா. என்று சொல்லிக் கொண்டே தன் தந்தையிடம் பாட்டி கொடுத்த பரிசை காண்பித்தான்.

      ஹ்ம்ம் சரிடா கண்ணா,

         அம்மா..... என்னை மன்னிச்சிடுங்கம்மா.... கண்களில் கண்ணிருடன் சிவா தன் தாயின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

             நான் உங்கள வீட்ட விட்டு வெளிய போக சொல்லியிருக்க கூடாது. நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுங்கம்மா.என்றான். உடனே கிளம்புங்கம்மா நம்ம வீட்டுக்கு போகலாம். இனிமே நீங்க ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது என்றான். நீங்க இருக்க வீட்ல இருக்க இஷ்டம் இருந்தா இருக்கட்டும் இல்லன்னா அவ அவங்க அம்மா வீட்டுக்கே போகட்டும் என்றான் தன் மனைவியை பார்த்து முறைத்த படி.

               என்னங்க நீங்க நான் இன்னும் அப்படியே இருக்கேன்னு நீங்க நினைக்கிறீங்களா.... நான் செய்த தப்பெல்லாம் உணர்ந்துட்டேன் என்ன மன்னிச்சுடுங்க அத்தை இனிமேல் உங்க மனசு கஷ்ட படறா மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். தயவு செய்து நீங்க வீட்டுக்கு வாங்க அத்தை என்ற சக்தியை ஆச்சரியத்தோடும் சந்தோஷத்தோடும் பார்த்தான் சிவா.

                 உங்க யார் மேலயும் எனக்கு கோபம் இல்லப்பா. நீங்க எப்பவும் சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதும். நான் இங்க எந்த குறையும் இல்லாம் சந்தோஷமா தான் இருக்கேன். நீங்க இரண்டு பேரும் என்னை கூப்பிட்டதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் என்னோட பேரன் பிறந்த நாள் அன்னைக்கு அவன பார்க்கனும்ன்னு நினைச்சேன் பார்த்துட்டேன். அது போதும் எனக்கு. என் பையனும் என் மருமகளும் என்னைக்காவது ஒரு நாள் மனசு மாறி வந்து என்ன கூப்பிட மாட்டாங்களான்னு இது நாள் வரை இந்த உசிர பிடிச்சி வைச்ச்ிருந்தேன். இப்ப அது நடந்துருச்சி எனக்கு அது போதும் அது போதும் ...... என்று தன் மகனை கட்டிக் கொண்டு தன் உயிரை விட்டள் லட்சுமியம்மாள்.


              தன் வாழ்வில் விடிவெள்ளியாய் முளைத்த அந்த பூ மரம் இன்று வேரோடு சரிந்து தன் இலைகளை உதிர்த்து விட்டதை உணர்ந்து அம்மா.... என்று கதறினான் சிவா.


                                                             -முற்றும்-

-------------------அன்புடன் உங்கள் நினைவெல்லாம் நித்யா----------------

டிஸ்கி 1 : தோழமைகளே.!! இந்த கதை கடந்த டிசம்பர்2011 ம் மாதம் ”இவள் புதியவள்” என்னும் மாத இதழில் வெளி வந்த சிறுகதை என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
”இவள் புதியவள்” இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

டிஸ்கி 2 : இது நான் எழுதி வெளிவந்த முதல் சிறுகதை என்பதையும் பெரு மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்து எனக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த எல்லாருக்கும் நான் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்

2 comments :

அருமையான சிறு கதை தோழி.. வாழ்த்துக்கள்

நன்றி தோழர் காஜா அவர்களே.... தொடர்ந்து உங்கள் ஊக்கமும் உற்சாகமும் வேண்டுகிறேன்.....