இழப்பு...
மழை தன்னை தீண்டும் உணர்வில் நாணி
மேகத்திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்ட நெடுவானம்
அதிகாலை வேளையில் நேரந்தவறாமல்
காலக்கணக்கோடு காத்திருந்து கூவும் கடமைதவறா சேவல்
நிறைவாக எழுந்து நின்று தன்னைத்தாங்கும்
தேகத்தை குனிந்து காதலுடன் நோக்கும் நெற்பயிர்
மேல்சட்டையில்லாது மாராப்பிட்டு கொசுவம் முடிந்த
சேலையுடன் தலையில் கூடை வைத்து மாம்பழம் விற்கும் பாட்டி
அடுத்ததெரு சின்னஞ் சிறுமலர் சீருடன்
வயதுக்கு வந்தாள் என சிரித்துக்கொண்டே சொல்லும் சுவரொட்டி
கன்னியழகிகள் தன் மலரான பருவம் காக்க
கண்னை உறுத்தாது நேர்த்தியுடன் உடுத்திய தாவணி
சன்னலின் கம்பிகளுக்கிடையில் நின்று
காதல் தந்தியடிக்கும் ரெட்டைச்சடை கன்னியின் கண்கள்
தூரத்து நடையினில் மயில் வரும் சேதிதனை
காத்திருக்கும் காதலனுக்கு சொல்லிவரும் வெள்ளி கொலுசு
கண்ணாடிக் குழம்பென்ற நிறத்தில் ஆர்ப்பரித்து
அழகாக வளமோடு வற்றாமல் என்றும் ஓடும் ஜீவநதி
நடுசாமம் ஆனபோதும் மகன் வருகை பார்த்திருந்து
சோறு படைத்து தொண்டு செய்யும் தாயின் பாசமிகு உள்ளம்
ஊடல் கொண்ட பின்பு கூடும் நேரம்
இல்லாள் விழிநோக்கி போதையில் சொக்கும் சுக தருணம்
பதிலே இல்லாமல் நம்மை திருதிருவென
முழிக்கவைக்கும் புத்தித்கூர்மையான குழந்தையின் கேள்வி
கதிரவன் தவறினாலும் தவறாது கூட்டம் போட
குட்டிச்சுவர் மேல் வரிசையாக அமர்ந்துவிடும் நட்பு
யாருக்கும் அடங்காது யாரையும் பிடிக்காத
என்னுடைய சொல்லுக்கே அடங்கும் இரண்டு சக்கரவாகனம்
குற்றால அருவியில் குளிரோடு குளிராக
ஆனந்தக் குளியலிடும் வேளை படபடவெனத் துடிக்கும் உதடு
பத்துமணி இரவில் கொடும் பசி பொழுதில்
இதமாய் ஆவிபறக்கும் ரோட்டோரக் கடையின் இட்லி
ஆகியவை எங்கே என
நிதமும் தேடுகிறேன்
வேதனையில் வாடுகிறேன்
இங்கே இருக்கின்றேன் நான்
எனக்கான இவைகளும்
இன்னும் பலவும் இல்லாமல்
ரணமாய் நடை பிணமாய்....
---------------------------------------------------
---உங்கள் அன்பு இசையன்பன்----
No comments:
Post a Comment