விலை மாதர்கள்..
வசந்த இதழ் விரித்து
வண்டுண்ண உடல் கொடுக்கும்
வாசமில்லா வாடகை மலர்கள்
கண்கவர் இறகு முளைத்து
காசுக்கு கவர்ந்திழுக்கும்
வர்ணமில்லா வண்ணத்துப்பூச்சிகள்
வறுமை இருள் விரட்ட
வற்றாது ஒளி கொடுக்கும்
அமாவாசை இரவின் நிலவுகள்
சம்போக சாம்ராஜ்யத்தில்
தேகம் தந்து தோற்றுப் போக
ஊதியம் பெறும் ஊமை ராணிகள்
அரிதாரம் முகத்தில் இட்டு
அழுகைதனை மறைத்து வைத்து
அழகு விற்கும் தேவதைகள்
வேலி என்று நம்பி வந்து
வேதனைக்கு கூலி வாங்கி
வேரறுந்து மண்ணில் வீழும் விருட்சங்கள்
பொய் ஒளியின் கவர்ச்சிக்காக
மெய் ஒளியை விற்பனை செய்து
விளக்கில் விழும் விட்டில்கள்
உடலின் பசி தாங்காமல்
புசிக்க வரும் மிருகத்திற்கு
வயிற்றுப்பசி தாங்காது விலைபோகும்
உயிர்கள், விலைமாதர்கள்...
---------------------------------------------------
----------உங்கள் இசையன்பன்------------
No comments:
Post a Comment