14 April 2011

காலம் தரும் பாடம்..

Posted inதான் கற்றுக் கொடுக்கும் பாடத்திற்கு விலை அதிகம் என்பதனை மெல்ல புரியவைத்துக் கொண்டிருக்கிறது காலம். ஆம் காலம் மிகச் சிறந்த ஆசான் என்ற உண்மைதான் நானும் ஏற்க ஆரம்பித்துவிட்டேன்..

மனமுரண்டு கொண்டோ அல்லது அதற்கு மனம் தயாராகாமலோ காலத்தினையும் அதன் பாடங்களையும் கற்காமல் மடமையாய் இருந்த நாட்களை அசை போட்டால் அதில் மிகப் பெரிய சூனியத்தைத் தவிர வேறொன்றையும் காணவில்லை..

வாழ்வில் வெற்றி எனும் முகடைக் கட்டாயம் தொட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஒரு பெரும் தீப்பொறியாக என்னேரமும் தன்னுடைய வீரியத்தைக் காட்டிக் கொண்டு இருப்பதன் விளைவாக ஓடிக் கொண்டே இருந்தேன் ஓடிக்கொண்டே இருக்கிறேன், நீண்ட பயணமாக வழி தெரியாமலேயே... ஆனால் அந்த முகட்டை தொட்டேயாக வேண்டும் என்பதற்கான வழிவுரையை தற்போது காலத்திடம் கற்க ஆரம்பித்துள்ளேன். நான் ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளாமலும், என் பாதையை மாற்றிக் கொள்ளாமலும் ஓட்டத்தினை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.. வாழ்க்கையின் பாடமும் தொடர்கிறது தேடலும் தொடர்கிறது.

உள்ளக்கிடக்கையின் உணர்வுகளுக்கு நான் மகுடமளிக்கும் நாளுக்காய்க் காத்துக் கொண்டிருக்கிறேன். கொண்ட மனமதை காதலித்து எண்ணங்களையும் செயல்களையும் எந்நேரமும் ரசித்துக்கொண்டே இருந்து ரசிகன் என்ற போர்வையில் ஏதாவது கிடைக்காதா என தேடி ஓடி, வாழ்க்கையை ரசனை என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறேன். நிறைய மனித பெயர் தாங்கிகளின் குரோத பார்வை, வார்த்தைகளையும் தாண்டி பயணிக்கிறேன். வெறும் பணம் தின்னும் பிணமாக இல்லாமல் வாழ்வின் வர்ணங்களை கண்ணால் படம் பிடித்து மனதிலேற்றி அனுபவிக்கிறேன்.

உலத்தினை பணம் விளையும் வயற்காடாய் மட்டும் இந்த மட மனிதர்களால் எப்படி பார்க்க முடிகிறது. எத்துனை விசயங்கள் நம்மைச் சுற்றி ஒளிவட்டமிட்டு கண் சிமிட்டுகின்றன அதனை எல்லாம் புறந்தள்ளி உயிரோட்டமே இல்லாத பணம் பொருட்களுக்கு தன்னுடைய வாழ்வையும் மனதையும் காவு கொடுப்பதாக இருந்தால் அவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள். உலகத்தினை பணம் எனும் மாயக் கண் கொண்டு பார்ப்பதால் மற்றவர்க்கு இவர்கள் பணம் காய்க்கும் மரமாக மட்டுமே தெரிகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய உண்மை, கொடுமை. பணம் அச்சடிக்கும் உயிரற்ற இயந்திரத்திற்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்.

வாழ்க்கையில் வெற்றி என்பதற்கான அர்த்தம் பணம் சேர்த்து சொகுசு அனுபவிப்பது என்று எந்த அகராதிகளிலும் எனக்கு காண கிடைக்கவில்லையே ஏன்.?? மனிதனை மனிதன் மதிப்பதற்கு பணம் இருக்க வேண்டுமாமே. அட.! பணம் தயாரிக்கும் மூடர்களே.! பணம் படைத்த உங்களுக்கு கிடைக்கும் மரியாதை பணத்திற்கு கிடைப்பதே அது உங்களுக்கு என எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள், ஆச்சரியம்தான்..!!

பணத்தையும் தாண்டி சரித்திரம் சொல்லும் சாதனை கொள்ள வேண்டும் எனக்கு. அச்சாதனையை நான் கொள்ள வேண்டும் சாதனையாளன் எனும் பேர் எனக்கானதாக இருக்க வேண்டும் பணத்திற்கானதாக இருக்க கூடாது என்பதில் உறுதியுடன் நிற்கிறேன் நான். அதற்கான செய்முறையைத்தான் நான் காலப் பட்டறையில் தன்நம்பிக்கை எனும் வகுப்பில் உழைப்பு எனும் பாடமாய் கற்கிறேன். அங்கே சோதனைகள் பல இருக்கலாம் வேதனைகளுக்கான வாய்ப்புகள் இல்லையென அறிகிறேன்.

எனக்கான திறனையும் திடனையும் நானே அறிந்து வகுக்கிறேன். என்னேரமும் அறிவதனை அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன் எனக்கான அத்துனை எதிர்பதங்களையும் நான் உரைகல்லாக எடுத்து பயன்படுத்துகிறேன்.

தற்போது வாழ்க்கையின் சில விசயங்களை மனம் வெறுக்காமல் ஏற்கிறது, மனம் ஒட்டுண்ணியாய் வைத்திருந்த சில விசயங்களை தற்போது குப்பை தொட்டியில் தூக்கிப் போடுகிறது. தேவையை தக்க வைக்க போராடுகிறது தேவையற்றவையை நிராகரிக்க முன்னுக்கு நிற்கிறது..

நான் நிச்சயம் சொல்வேன் ஏ.! வாழ்வின் சிகரம் தொட்ட மனிதர்களே.! எனக்கும் அங்கே ஒரு இடம் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் இதோ நான் வந்து கொண்டு இருக்கிறேன் விரைவில் நெருங்கி விடுவேன் தங்களுடன்.....
-----------------------------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்அன்பு நண்பர்களே!.. படித்துவிட்டு தங்களுடைய பொன்னான கருத்துக்களை சொல்லிட்டுப் போங்க.., அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க...

0 comments :