23 February 2012

பிரியா நட்பு (நித்யஸ்ரீ)

Posted in , , ,அந்த காம்பெளண்ட் அதிகாலையில் மங்களகரமாக இருந்தது. வனிதாவும், சுதாவும் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். அந்த வீட்டுக்கு வந்த நான்கு வருடங்களில் இருவரும் இணைபிரியா தோழிகள் அந்த நட்பு அவர்களின் குடும்பத்தினைரையும் பிணைத்து விட்டிருந்தது. ஒரே மாதிரி உடைகள் என்று எல்லாவற்றிலும் ஒற்றுமை கூத்தாடும். இருவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படித்துக் கொண்டு இருந்தனர். ஒருவருக்கு முடியவில்லை என்றால் அடுத்தவள் வரிந்து கட்டிக் கொண்டு தோழியின் வீட்டைக் கவனித்துக் கொள்வார்கள். ஆனால், இவர்களின் நட்பு பக்கத்து வீட்டுகாரர்களுக்கு குமைச்சலாய் இருந்தது. என்னடி இவளுக இப்படிக் குழையறாளுகளே? 

விடுக்கா ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் சண்டை போடாமயா போயிடப் போறாளுக? அப்ப பார்த்துக்குவோம். என்று அங்கலாய்ப்பது உண்டு. ஆனால், வனிதா, சுதாவின் நட்பு மட்டும் நாளுக்குநாள் பலப்பட்டுக் கொண்டே வந்தது.
ஒரு நாள் மாலை வனிதாவின் கணவர் சுகுமார் ஊரில் இல்லை, அன்று பலத்த மழை வேறு பள்ளிக்கு சென்ற குமரன் இன்னமும் வீடு திரும்பாதது கண்டு பதைத்த வனிதா, சுதாவின் வீட்டிற்குச் சென்றாள். 


அங்கு சுதாவின் கணவன் வரதன். மழையில் நனைந்து விட்டு வந்திருந்த மகன் சதீஷிற்கு உடை மாற்றிக் கொண்டிருக்க, அண்ணா சதீஷ் வந்திட்டானா? குமரன் இன்னமும் வீட்டுக்கு வரலையே? இரண்டுபேரும் எப்போதும் ஒண்ணாதானே வருவாங்க? வரதன் சதீஷ்ஷிடம் திரும்பி என்னடா நீங்க இரண்டு பேரும் எப்போதும் ஒண்ணாத்தானே வருவீங்க? குமரன் எங்கே? என்று கேட்டார். சிறுவன் மெளனம் சாதித்தான். சற்று அரற்றிக் கேட்டதும்.
அவன் இன்னிக்கு ஸ்கூல்ல எல்லார் முன்னாடியும் நான் நேற்று விளையாட்டில் தோத்ததை சொல்லி கிண்டல் பண்ணிட்டு இருந்தான். எனக்கும் அவனுக்கும் சண்டை வந்திடுச்சு அதனால் நான் முன்னாடி வந்திட்டேன் என்றான் சதீஷ் கடவுளே,,,, என் பிள்ளை இப்போ மழையில்….. என்று பதறிய வனிதாவை சமாதானப் படுத்திவிட்டு வரதன் பள்ளிக்கு விரைந்தார். குமரனை அழைத்து வந்து வனிதாவிடம் சேர்ப்பித்தும் விட்டார். வழக்கம் போல் இரு சிறுவர்கள் விளையாடாமல் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தார்கள். வரதன் இருவரையும் அழைத்தார்.

என்ன பிள்ளைகளா? சாப்பிட்டாச்சா? விளையாடப் போகலையா? இருவரும் மெளனமாய் இருக்க, சரி உங்க இரண்டு பேருக்கும் நான் இப்போ ஒரு கதை சொல்லப் போகிறேன். ஒரு மரபொந்தில் எறும்புக் கூட்டங்கள் புற்று கட்டியிருந்தது. அடுத்து வருவது மழைக்காலம் என்பதால் உணவு சேகரிக்க வெளியே செல்ல முடியாது என்றுணர்ந்து. எறும்புகள் தனித் தனிக் குழுக்களாக சேர்ந்து உணவு சேகரிக்க துவங்கியது. அப்போது, பெரிய வெல்லக்கட்டி ஒன்றைக் கண்ட எறும்பு ஒன்று ரகசியமாய் அதை தன் மனைவியிடம் மட்டும் சொல்லியது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் நாம் மட்டும் வைத்து சாப்பிடுவோம் என்று கூறியது. 


எனவே அதை வேறு இடத்தில் ஒளித்து வைக்க இருவரும் சென்றனர். பெரிய அளவு என்பதால் அதை கொண்டு போக மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது தவறிப்போய் அந்த வெல்லக்கட்டி ஆண் ஏறும்பின் மேல் விழுந்து விட, அதனடியில் எறும்பின் உடல் பாதி மாட்டிக் கொண்டு விட்டது. வெளியே வர முடியாமல் எறும்பு தவித்தது, பெண் எறும்பு எல்லாரையும் கூட்டி வந்து காப்பாற்றியது. எல்லாம் ஆண் எறும்பை குசலம் விசாரித்து தண்ணீர், தான் சேகரித்த உணவு என்று பகிர்ந்தளிக்க, ஆண் எறும்பு வெட்கியது சுயநலமாய், ஒற்றுமையாய் இல்லாததால் தனக்கு ஏற்பட்ட ஆபத்தையும் ஒன்றாய் இருந்தால்தான் நாம் எல்லாரும் நலமாய் வாழ முடியும் என்பதை உணர்ந்து எல்லோரிடமும் ஒற்றுமையாய் இருக்கத் துவங்கியது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று வரதன் உணர்த்திட , பிள்ளைகளும் கதை கேட்கும் சுவாரஸ்யத்தில் ஒன்றாயினர்.


வனிதாவும், சுதாவும் காய்கறி மார்கெட்டிற்கு சென்றனர். ஆமாம் தீபாவளி வருதே என்ன டிரஸ் எடுக்கப் போறே ?
நானே உங்கிட்டே கேட்கணுமின்னு இருந்தேன். சென்னை சில்க்ஸ்ஸில் ஆதிரான்னு ஒரு பட்டுப்புடவை வந்திருக்காம். போகலாமா? ம்… நாளைக்கே போவோம். 


சொன்னாற்போலவே உடைகள் எடுத்தனர், தீபாவளிக் கொண்டாடத்திற்கு பட்சணங்கள் எல்லாம் தயாராயின. ஆவலோடு பிள்ளைகள் எதிர்பார்த்த தீபாவளியும் அன்று விடியலும் வந்தது அவர்களுக்குள் விரிசலும் வந்தது. தீபாவளி நிகழ்ச்சிகள், பலகாரங்கள் எல்லாம் முடித்து இரண்டு குடும்பத்தினரும் பட்டாசு வெடிக்க வந்தனர். குமரனுக்கு பட்டாசு என்றால் கொள்ளைப் பிரியம். 


சதீஷ்ஷிக்கோ ரொம்பவும் பயம். அவன் பயந்து நடுங்கிய வண்ணம் கீதாவின் பின்னால் பதுங்கிக் கொண்டிருக்க, குமரன் வந்து அவனை பட்டாசு வெடிக்க அழைத்துப் போனான். 

நான் வரலைடா? பட்டாசுன்னா எனக்கு ரொம்ப பயம்?
என்னடா இதுக்குப் போயா பயப்படறது? அதான் நான் இருக்கேன் இல்லை, வா போகலாம் என்று சதீஷ்ஷை வற்புறுத்தி அழைத்து வந்தான். 


பயந்தபடியே பட்டாசை தொட்டான் சதீஷ், இந்தா இந்த ஊதுவத்தியை வச்சி அந்த புஸ்வானத்தைக் கொளுத்து.
வெடிக்குமாடா?
புஸ்வானம் வெடிக்காதுடா? பயப்படாதே என்று அவனிடம் தந்துவிட்டு குமரன் வேறொரு பட்டாசை எடுக்கப் போனான். அடுத்த இரண்டாவது நிமிஷம் சதீஷ்ஷின் அலறல் சப்தம் கேட்டது. பதறியடித்துக் கொண்டு காயம்பட்டவனைத் தூக்கிக் கொண்டு வரதன் ஓடினார். அங்கு மருத்துவமனையில் தீக்காயம் அதிகமில்லை, ஒருவராம் பத்துநாளில் சரியாகிவிடும் என்று சொல்லி மாத்திரை மருந்து தந்து அனுப்பி வைத்தார்.
வீடு திரும்பியும் அவள் அழுகை நிற்க வில்லை, வனிதாவும், சுகுமாரும் அவளைச் சமாதானப்படுத்தினார்கள். கவலைப் படாதே சுதா சின்னக் காயம் தானே சரியாயிடும் என்று ஆறுதலாகப் பேசிய தோழியிடம், சுதாவோ கோவத்துடன் எல்லாம் உங்கள் பிள்ளையால் தான் என்று ஆவேசமாக சொல்ல அவர்கள் சற்றே திடுக்கிட்டுத்தான் போனார்கள்
பின் சுதாரித்து கொண்டு என்னமா இது சின்ன பசங்க ஏதோ விளையாடும் போது இப்படி ஆயிடுச்சி விடும்மா. சரியாயிடும். என்று மீண்டும் அவர்கள் சமாதானம் கூற,


இதே உங்கள் பிள்ளைக்கு இப்படி ஆயிருந்தா நீங்க இப்படி பேசுவிங்களா ? காயம் என் பிள்ளைக்குதானே அதான் உங்களுக்கு என்ன வாய் பேச்சில் சொல்லி விடுவிர்கள். வலியும் வேதனையும் எங்களுக்குதானே என்று பொறிந்து தள்ளி விட்டாள். இந்தாடா இனி அந்த வீட்டு பக்கம் போன அவ்வளவுதான் என்று வாடா உள்ளே என அவனை உள்ளே இழுத்து சென்று கதவை தாழிட்டாள் சுதா,
வனிதாவும் தன்பங்குக்கு குமரனை அழைத்து இனி அவனுடன் பேசக்கூடாது என்று கண்டித்தாள். 


சில நாட்கள் சென்றது,
பெரியவர்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், சிறுவர்கள் இருவரும் முன்பு போலவே ஒற்றுமையாய் இருந்தார்கள். ஒருமுறை பள்ளியில் இவர்கள் இருவரும் விளையாடியதைக் கண்ட சுதாவும், வனிதாவும் கோபத்தின் உச்சிக்கே சென்று அவரவரர் பிள்ளைகளை அடித்தார்.
குமரனும், சதீஷ்ஷும் அழுதபடி வாயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது பார்த்த இரு பிள்ளைகளின் தகப்பன்களும் வர, என்னடா ஏன் பனியிலே உட்கார்ந்து இருக்கே? என்று கேட்டதற்கு?!

அம்மா அடிச்சிட்டாங்க…
நீ என்ன தப்பு பண்ணினே ராஜா,
நான் ஒண்ணும் பண்ணலைப்பா, நானும் குமரனும் விளையாடினோம் அவ்வளவுதான், அதுக்குப்போய் இப்படி அடிச்சிட்டாங்க.….!
அப்படியா?
ஆமா அங்கிள் நாம எத்தனை சந்தோஷமா இருந்தோம். இப்பொவெல்லாம் ஏன் சதீஷ் எங்க வீட்டுக்கு வர்றதே இல்லை, அம்மாகிட்டே பதிலே சொல்லாம அடிக்க வர்றாங்க.
அப்பா நானும் குமரனும் சண்டை போட்டப்போ ஒரு கதை சொன்னீங்களே அதை அம்மாகிட்டேயும் சொல்லுங்க அப்பத்தான் சும்மா இருப்பாங்க?! என்றான்
வரதனோ, வீம்புக்கு சண்டையிடுபவர்கள் அதன் பலனை அனுபவிப்பார்கள். என்றுமே ஒற்றுமைக்குத்துத்தான் வீரியம் அதிகம். விடு நீ எப்பவும் போல விளையாடு என்று சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த சுதாவும், வனிதாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
மறுநாள் காலையில் பழையபடியே ஒன்றாய் கோலமிட்டனர் சுதாவும், வனிதாவும், அவர்கைளைப் போலவே அவர்களின் கோலமும் நட்பை வரவேற்றது. ஒற்றுமை ஓங்குக. என்று எங்கோ கோஷம் எழும்பியது.


--------------------------------------
உங்கள் அன்பு நினைவெல்லாம் நித்யா..

(டிஸ்கி-- அன்பு நண்பர்களே இந்த கதை இந்த வாரம் ராணி வார இதழில். ஒன்றில் ஒன்றாக எனும் பெயரில் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...)