04 November 2014

கரையைக் கடந்த இசைப்புயல்

Posted in ,


1992ல் தன்னுடைய முதல் படமான ரோஜா வில் தமிழ்நாட்டு மக்களின் நாடி நரம்பிலெல்லாம் தனது புதிய வகை இசைவெள்ளத்தைப் பாயச்செய்து அவர்களை தூங்கவிடாமல் செய்தவர் தமிழகத்தின் தன்னிகரில்லாத இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த படத்தையும் அதனைத்தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் தனது தனித்துவத்தை, தனிமுத்திரையை பாடல்களாக தந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை இசையால் கட்டிப்போட்டார்.
எனது தந்தைக்கு அவரின் மின்சாரக்கனவில் இருந்து "பூ பூக்கும் ஓசை" மற்றும் "வெண்ணிலவே" பாடல் மிகவும் விருப்பப் பாடல்., நான் வேறு பாடல் கேட்டுக்கொண்டிருக்கும் போது எனது தந்தை என்னிடம் "காஜா (நான்தான்) பூ பூக்கும் ஓசை ரவுமான் பாட்ட வையேன் என என்னிடம் கேட்பார் (அப்போது அவருக்கு கிட்டத்தட்ட வயது 60 கடந்திருந்தது).

1992ல் ரோஜா வில் தொடங்கி, திருடா திருடா, புதிய முகம், உழவன், ஜென்டில்மேன், டூயட், காதலன், இந்தியன், ரட்சகன், காதல்தேசம், காதலர்தினம், மின்சாரக்கனவு, லவ்பேர்ட்ஸ், என்சுவாசக்காற்றே, பம்பாய், இந்திரா, முத்து, ஜீன்ஸ், உயிரே என 1999 வரை ரஹ்மானின் சாம்ராஜ்யம் ஓங்கி உயர்ந்திருந்தது,  8வருடத்தில் விறுவிறுவென இமயமலையின் உச்சானியில் ஏறிய இசைப்புயல் அடுத்து வந்த வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத்தொடங்கிவிட்டது.


2000 த்தில் வந்த அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ரிதம், தெனாலி ஆகிய படங்களில் அலைபாயுதே மற்றும் தெனாலி ஆகிய படப்பாடல்கள்தான் நெஞ்சைத்தொட்டது.
2001, 2002ல் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை, 2003ல் பாய்ஸ் கொஞ்சம் பட்டையை கிளப்பியது, 2004ல் நியு சொல்லும் படியாக அமைந்தது, 2007 ல் சிவாஜி, 2010ல் விண்ணைத்தாண்டி வருவாயா நன்றாக அமைந்தது அவ்ளோதான் அதோடு ஏ.ஆர் என்ற புயல் அடித்து ஓய்ந்து கரையை கடந்துவிட்டது போல..

ரஹ்மானின் தீவிர ரசிகர்கள் என்ற வட்டத்திற்குள் இருந்து பார்த்தால் கடல், மரியான், இப்போது வந்த ஐ வரைக்கும் அருமையான இசையாகத்தான் தெரியும். ஆனால் ஒரு சராசரி இசை ரசிகனாக இருக்கும் பட்சத்தில் அந்த 8, 10 வருட இசைதான் ரஹ்மான் அவர்களுக்கு கிரீடம் அதற்கு மேல் அவரால் தாக்குபிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை நிலவரம் என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம்.

அவரின் ரசிகர்கள் ரஹ்மானின் தற்போது நிலைக்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள்
அவர் ஆஸ்கார் வாங்கிவிட்டார் அதனால் உலகம் முழுவதும் அவர் பாட்டை கேட்க வேண்டும் அதனால் அவர் உலகத்தரத்திற்கு பாடல் கொடுக்கிறார் அதை புரிந்து கொள்ள நமக்கு தனி ஞானம் வேண்டும் (அது எந்த கடையில கிடைக்குமோ தெரியல !) என்று ஏதேதோ சொல்கிறார்கள்., அந்த வாதத்தை ஏற்க என்னைப்போல் ஒரு சராசரி ரசிகனுக்கு மனம் வரவில்லை என்பதுதான் நிதர்சனம். 

என்னதான் உலக ரசிகர்களுக்கு பாட்டு போட்டாலும் அவர் உள்ளூர் ரசிகர்களை அடியோடு மறந்தது
வேதனைக்குறியது.

ரஹ்மான் அவர்கள் அனைத்து ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்டு இனியாவது அவர் நல்ல கேட்டு ரசிக்கும் படியான பாடல்களைத்தருவார் என நான் நம்புகிறேன், இனியும் "பெப்பரப்பே" அப்படின்னுதான் அவர் பாட்டு இருந்தால் என்னைப்போல ரசிகர்கள் அவருக்கு சரக்கு தீர்ந்து விட்டது என்று வேதனையோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் :(

டிஸ்கி: நான் பலதரப்பட்ட இசையை ரசிக்கும் ரசிகன் என்ற முறையில் என்னுடைய கருத்தாக்கத்தை மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன், மற்றபடி ஏ.ஆர் ரஹ்மான் அவர்களை ஒரு திறமைசாலியாக நானும் பெரிதும் மதிக்கிறேன்.. 
(அடிக்க ஆட்டோல ஆள் அனுப்பிடாதீங்கய்யா !!!!! )

0 comments :